மறுமை வாழ்வு

1. மறுமை இன்றி வாழ்வில் அர்த்தமில்லை

மஆத் என்பது மறுமை நாள் பற்றிய நம்பிக்கையைக் குறிக்கின்றது. உலகில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரும் மறுமை நாளில் மீள உயிர்ப்பித்து எழுப்பப்படுவார்களென்றும், அவர்களது செயல்களனைத்தும் விசாரிக்கப்பட்டு, நல்லடியார் கள் சுவனத்திற்கும், பாவிகள் நரகிற்கும் அனுப்பப் படுவர் என்றும் நாம் நம்பிக்கை கொள்கிறோம்.

'அல்லாஹ், அவனைத் தவிர வேறு இறைவனில்லை. அவன், நிச்சயமாக மறுமை நாளில் உங்களை ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமில்லை."           (04: 87(

'எவர் வரம்பு மீறி இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத் துக் கொண்டாரோ, நிச்சயமாக அவர் ஒதுங்குமிடம் நரகமாகும். மேலும், எவர் தன் இறைவனின் சந்நிதியைப் பயந்து, மனோ இச்சையிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக அவர் ஒதுங்குமிடம் சுவனமாகும்."   (80: 37-41)

இவ்வுலகமென்பது, முடிவற்ற நிலையான ஒரு வீட்டை அடைவதற்காக மனிதர்கள் கடந்து செல்லும் பாலமாக இருக்கின்றது என்பது எமது நம்பிக்கையாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் வேறொரு வீட்டிற்காக பயிர் விதைக்கப்படுகின்ற ஒரு விளைநிலமாகும்.

ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்:

'உலகத்தையே உண்மையாகக் கொண்டவருக்கு அது உண்மையின் இருப்பிடமாகும். அதனைப் பயன்படுத்தியவர்களுக்கு அது செல்வங்களைத் தருமிடமாகும். அதிலிருந்து கற்றுக் கொள்பவருக்கு அது படிப்பினை தரும் இடமாகும். அது இறைநேசர்களின் வழிபாட்டுத் தலமாகவும் மலக்குகளின் தொழும் இடமாகவும் வஹியின் இறங்கு தளமாகவும் அல்லாஹ்வுடைய நேசர்களின் சந்தையாகவும் இருக்கின்றது."  (நஹ்ஜுல் பலாகா - மொழி 131)

2. மறுமை பற்றிய ஆதாரங்கள்

மறுமை நாளென்பது நிச்சயமானது என்பதை நிறுவக் கூடிய ஆதாரங்கள் மிகத் தெளிவானவை என்பது நமது நம்பிக்கையாகும்.

1. படைப்பின் நோக்கமானது, மனிதன், இவ்வுலகில் பிறந்து பிரச்சினைகளுக்கு மத்தியில் சில நாட்கள் வாழ வேண்டும், அதன்பின் அழிந்து விடுவது என்ற குறுகிய போக்கைக் கொண்டதல்ல என்பதற்கு இவ்வாழ்வே போதுமான அத்தாட்சியாகும்.

'உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காகத் தான் என்றும் நிச்சயமாக நீங்கள் எம்மிடம் மீளக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?"   (23: 115)

இங்கு குறிப்பிடத்தக்க விசயம் யாதெனில் மஆத் இல்லையெனில், மனித வாழ்க்கையும், படைப்பும் வீணானதாகவும், அர்த்தமற்றதாகவும் போயிருக்கும் என்பதை இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.

2. இறைவனது நீதி அவசியமானது. இவ்வுலகில் நல்லவர்களும் தீயவர்களும் சம அந்தஸ்துப் பெற்றவர்களாக இருப்பதையும், சில வேளைகளில் நல்லவர்களை விட தீயவர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களாக மாறிவிடுவதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் நல்லோரும் தீயோரும் அவரவரது செயல்களுக்கான வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அல்லாஹ்வினால் நீதியான கூலி வழங்கப்படுவது அவசிய மாகின்றது.

'தீமைகளைச் சம்பாதித்துக் கொண்டவர்கள், விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்தவர்களைப் போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார் களா? அவர்கள் உயிர் வாழ்வதும், மரணித்து விடுவதும் சமமே. அவர்கள் இதற்கு மாறாக தீர்ப்புச் செய்து கொண்டது மிகக் கெட்டதாகி விட்டது."   (45: 21)

பெறுவதில்லை. அது நல்லவர்களுக்கு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பது

3. அல்லாஹ்வின் முடிவற்ற அன்பும் அருளும் மனிதன் மரணித்ததுடன் நிறைவு அவசியமாகின்றது.

'அவன், கருணையை தன் மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். நிச்சயமாக அவன் மறுமை நாளில் உங்களை ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமில்லை."  (06: 12(                                                                                                           

மறுமை நாள் தொடர்பில் சந்தேகம் கொண்டோரைப் பார்த்து அல்குர்ஆன் கூறுகின்றது, 'உங்களது ஆரம்பம் அல்லாஹ்விடமிருந்தே உருவானது. அவ்வாறிருக்க, மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் அவனது மகாவல்லமையில் எவ்வாறு உங்களுக்கு சந்தேகம் எழுகின்றது? அவன் தான் ஆரம்பத்தில் உங்களை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர், உங்களை வேறொரு வாழ்வுக்காக மீட்டுகின்றான்.|

'படைப்புகளை முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகி விட்டோமா? அவ்வாறன்று. (இறந்தபின்) மீண்டும் படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர்."  (50:15)

'மேலும், அவன் தன்னுடைய படைப்பை மறந்து விட்டு ஓர் உதாரணத்தையும் நமக்காகக் கூறுகின்றான். 'எலும்புகளை, அவை மக்கிப் போன நிலையில் உயிரூட்டுபவன் யார்?| என்று அவன் கேட்கிறான். (நபியே!) நீர் கூறும். முதன் முதலில் அதனைப் படைத்தானே, அவனே அதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் நன்கறிபவன்." (36: 78,79)

மனிதனது படைப்பு, வானம் பூமியைப் படைத்ததை விடவும் முக்கியமானதும் அற்புதமானதுமாகும். இப்பாரிய உலகத்தை பல ஆச்சரியங்களுடன் படைத்திருக்கும் இறைவன், மனிதன் மரணித்த பின்பும் அவனை உயிர்ப்பிப்ப தற்கும் சக்தியுள்ளவனாவான்.

'நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் அவற்றைப் படைத்ததால் சோர்வடைய வில்லையே. இவ்வாறே, மரணித்தோரை உயிர்ப்பிக் கவும் சக்தியுடை யவன் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? ஆம், நிச்சயமாக அவன், அனைத்தின் மீதும் வல்லமை கொண்டவன்." (47: 33)

3. உடல் ரீதியான மஆத்

மறுமையில் ஆத்மா மாத்திரம் விசாரணைக்காகச் செல்வதில்லை. உடலும் உயிரும் இணைந்து சென்றே புதியதொரு வாழ்வை ஆரம்பிக்கின்றன. ஏனெனில், இவ்வுலகில் வாழ்ந்த காலங்களில் உடலும், உயிரும் சேர்ந்தே ஒரு விடயத்தைச் செய்தன. ஆதலால் அங்கு கிடைக்கும் நன்மை-தீமைகளும் இரண்டையுமே சென்றடைய வேண்டியது அவசியமாகும்.

குர்ஆனில் மஆதைத் தொடர்பு படுத்தி வந்துள்ள அநேகமான வசனங்களில், உடலும் இணைந்த மஆத் பற்றிய கருத்துகளே பொதிந்திருக்கின்றன. இறந்து போன எலும்புகளை எவ்வாறு புதியதொரு வாழ்வுக்குத் திருப்ப முடியுமென எதிரிகள் ஆச்சரியத்துடனும், சந்தேகத்துடனும் வினாவெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அல்குர்ஆன் இவ்வாறு பதிலளித்தது:

')நபியே!) நீர் சொல்லும், முதலில் அதைப் படைத்தவன் தான் அதனை மீண்டும் உயிர்ப்பிப்பான்."  (36: 79)

'மனிதன், அவனது உக்கிப் போன எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று எண்ணுகின்றானா? ஆம், நாம் அவனது விரல்களின் நுனிகளைக் கூட சீர்படுத்த சக்தியுடையோராய் இருக்கின்றோம்."  (75: 3,4)

இவ்வசனங்களும், இவை போன்ற வேறு பல வசனங்களும் உடலின் மஆதையே குறிப்பிட்டுச் சொல்லுகின்றன. 'நீங்கள் உங்களது கப்றுகளிலிருந்து எழுப்பப்படுவீர்கள்" என்று கூறும் அல்குர்ஆன் வசனங்களும் கூட இதனையே குறிப்பிடுகின்றன. (36:51,52  54:07  70:43)

இவை தவிர, அல்குர்ஆனின் வேறு பல வசனங்களும் உயிர், உடல் இணைந்த மஆதைப் பற்றி விபரிக்கின்றன.

4. ஆச்;சரியமான மறு உலகம்

மரணத்தின் பின்னுள்ள மீளவுயிர்ப்பித்தல், விசாரணை, தீர்ப்பு, சுவனம், நரகம் முதலானவற்றை உள்ளடக்கிய மறுமை வாழ்வானது வரையறுக்கப்பட்ட இவ்வுலகில் நாம் புரிந்து கொள்ள முடிந்ததை விட மிக உயர்ந்ததும் சிறப்பானதும் ஆகும் என நாம் நம்புகின்றோம்.

'எந்தவொரு ஆத்மாவும் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை அறிய மாட்டாது.' (32: 17)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களின் பிரபல்யமான ஹதீஸ் ஒன்றிலே வந்திருப்பதாவது:

'எனது நல்லடியார்களுக்கு எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தச் செவியும் கேட்டிராத, மனித எண்ணத்தில் என்றுமே தோன்றாத அருட் கொடைகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகின்றான.;"

புஹாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கலை அறிஞர்களும் தப்ரீஸீ, ஆலூஸீ, குர்துபி போன்ற பிரபலமான தப்ஸீர் கலை அறிஞர்களும் தங்களது நூற்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையென்பது, தாயின் வயிற்றுக்குள் மட்டுப் படுத்தப் பட்ட சூழலில் உயிர்வாழும் சிசுவின் வாழ்வைப் போன்றதாகும். கற்பத்திலிருக்கும் சிசு, திறமை, சாதுரியம் என எத்தகைய இயல்புடையதாக இருப்பினும் வெளிப்புற உலகிலுள்ள சூரியன், சந்திரன், தென்றல், காற்று, தாவரங்கள், பசுந்தரைகள், கடலலைகள் போன்ற எதனையும் உணர்ந்து கொள்ளமாட்டாது. அதுபோலவே, மனிதனின் இவ்வுலக வாழ்க்கையில் மறுமை பற்றிய உண்மைகளை பூரணமாக அறிந்து கொள்வதென்பதும் சாத்தியமற்றதே. மனிதர்களாகிய நம்மைப் பொறுத்த வரையில் கியாமத் வாழ்வு என்பது கற்பத்திலுள்ள சிசுவுக்கு வெளியுலக வாழ்வு போன்றதாகும்.

5. செயல்களின் பட்டோலை

பட்டோலை என்பது மனிதர்களின் செயல்களை விபரிக்கும் ஒரு ஏடாகும். நல்ல அமல் செய்தோரின் ஏடு அவர்களது வலது கையிலும் பாவிகளின் ஏடு அவர்களது இடது கையிலும் வழங்கப்படும் என்பதாக நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். தத்தமது செயல்களைப் பார்த்து நல்லடியார்கள் சந்தோ'ப் படுவார்கள். பாவிகள் கைசேதப் படுவார்கள்.

'ஆகவே, எவர் தனது பதிவேடு வலக்கையில் கொடுக்கப் பட்டாரோ, அவர் 'வாருங்கள், எனது பதிவேட்டைப் படித்துப் பாருங்கள்" என மற்றவர் களிடம் கூறுவார். நிச்சய மாக நான் எனது கேள்வி கணக்கை சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன் என்றும் அவர் கூறுவார். ஆகவே, உயர்வான சுவனத்தில், திருப்தியான வாழ்வில் அவர் இருப்பார். மேலும், எவர் தனது பதிவேடு இடக்கை யில் கொடுக்கப்பட்டாரோ, அவர் 'எனது பதிவேடு கொடுக்கப்படாது இருந்திருக்க வேண்டுமே" எனக் கூறுவான்."                                (69:19-25)

அந்தப் பதிவேடு எப்படியிருக்கும், அதில் பொதிந்துள்ள வற்றை எவரும் நிராகரிக்க முடியாதளவுக்கு எவ்வாறு அது எழுதப்பட்டிருக்கும் போன்ற விடயங்கள் மனிதர்களைப் பொறுத்த வரை தெளிவற்றவையாக இருக்கலாம். இது நியாயமானதே.

ஏனெனில், மறுமை நாளின் விசேடத் தன்மைகளின் ஒவ்வொரு பகுதியையும் மனிதர்கள் தெளிவாக அறிந்து கொள்வதென்பது சாத்தியமற்ற தாகும். அது பற்றிய பொதுவான அடிப்படை அறிவு மாத்திரம் அவர்களிடம் இருக்கின்றது.

6. மறுமை நாளின் சாட்சிகள்

மறுமை நாளில், மனிதர்கள் அனைவரது செயலுக்குமான முதன்மை சாட்சியாளனாக அல்லாஹ் இருப்பான். அத்தோடு, மனிதர்களின் உறுப்புகளான கை, கால், தோல் முதலானவையும் மனிதர்கள் நடந்து விளையாடும் பூமியும் இன்னும் இன்னோரன்ன அம்சங்களும் சாட்சிகளாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்..

'அன்றைய தினம் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களது கால்களும் சாட்சி கூறும்."  (36:65)

'அவர்கள் தங்களின் தோல்களிடம் எங்களுக்கு எதிராக ஏன் நீங்கள் சாட்சி கூறுகிறீர்கள் எனக் கேட்பார்கள். அதற்கு அவை, ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்தவனாகிய அல்லாஹ் தான் எங்களையும் பேசவைத்தான் என்று கூறும்."  (41:21)

'அந்த நாளில் பூமி தன் செய்திகளை அறிவிக்கும். ஏனெனில் நிச்சயமாக உமது இறைவன் அதற்கு இவ்வாறு செய்யுமாறு வஹி மூலம் அறிவித்திருக்கிறான்."  (99: 4-5)

7. சிராத்தும் மீஸான் தராசும்

சிராத் எனும் பாலம், நன்மை-தீமைகளை நிறுக்கும் மீஸான் தராசு என்பனவும் மறுமையில் உள்ளதாக நாம் நம்புகின்றோம்.

சிராத் எனப்படுவது, நரகின் மேல் போடப்பட்டிருக்கும் ஒரு பாலமாகும். கண்டிப்பாக அனைவரும் அதனைக் கடந்தேயாக வேண்டும். உண்மையில் சுவனத்திற்குச் செல்லும் பாதை, நரகின் மேல் போடப்பட்டிருக்கின்றது.

'இன்னும் உங்களில் எவரும் (சிராத் பாலமான) அதற்கு வரக்கூடியவராக அல்லாது இல்லை. உமது இரட்சகனிடம் இது உறுதியான ஒன்றாகி விட்டது. பின்னர், பயபக்தி உடையோராக இருந்தோரை ஈடேற்றுவோம். அநியாயக் காரர்களை முழந்தாளிட்ட வர்களாக அதில் விட்டு விடுவோம்."      (19:71-72)

சிராத்தைக் கடப்பது இலகுவாக அமைவதோ அல்லது சிரமமாக அமைவதோ அவரவரது செயல்களின் அடிப்படையைப் பொறுத்தது என்பதாக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'சிலர் அதை மின்னல் வேகத்திலும் சிலர் குதிரை வேகத்திலும் சிலர் தவழ்ந்தும் சிலர் நடந்தும் சிலர் அதைப் பிடித்துத் தொங்கியவர்களாகவும் அதனைக் கடப்பார்கள். அப்போது, நரகம் அவர்களில் சிலரை எடுத்துக் கொள்ளும். சிலரை விட்டு விடும்."

இந்த ஹதீஸ் சிறு மாற்றங்களுடன் அஹ்லுல் 'Pயா மற்றும் அஹ்லுல் சுன்னா கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணம்: கன்சுல் உம்மால் -ஹதீஸ் 39036, தப்ஸீர் குர்துபீ பாக 6 - சூரா மர்யம் - வசனம் 71க்கான விளக்கத்துடன், செய்கு சதூகின் ஆமாலீ எனும் நூல் மற்றும் ஸஹீஹ் புஹாரீ பாக 8 - பக் 146 சிராத் நரகின் மீதான பாலம் எனும் தலைப்பின் கீழும் வந்துள்ளது.

மீஸான் என்பது, அதன் பெயரிலிருந்து விளங்கப்படுவது போன்று மனிதர்களது நன்மை-தீமைகளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தராசு ஆகும். அந்நாளில் ஒவ்வொருவரது நன்மை-தீமைகளும் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு ஒவவொன்றின் அளவுக்கேற்ப கூலியும் வழங்கப்படும்.

'மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். எந்தவோர் ஆத்மாவும் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. ஒரு கடுகின் வித்தளவு அது இருந்த போதிலும் அதனையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுப்பவர் களில் நமக்கு நாமே போதுமாகும்."  (21:47)

'ஆகவே, எவருடைய நன்மையின் எடை கனத்ததோ, அவர் திருப்தியுள்ள வாழ்வில் இருப்பார். எவருடைய எடை இலேசானதோ, அவர் தங்குமிடம் நரகம் தான்."  (102:6-9)

மனிதர்கள் இவ்வுலகில் புரிகின்ற செயல்களின் தன்மை தான் மறுமையில் அவர்களது வெற்றி தோல்வியை நிர்ணயிக் கின்றது. அன்றைய தினம், எதிர்பார்ப்புகளும் உபதேசங்களும் எவ்வித பயனுமளிக்க மாட்டாது. பரிசுத்தத் தன்மையும் தக்வாவும் இன்றி எதற்கும் பெறுமதி கிடையாது.

'ஒவ்வோர் ஆத்மாவும், தான் சம்பாதித்தவற்று க்குப் பிணையாக ஆக்கப்பட்டுள்ளது." (74: 38)

சிராத், மீஸான் பற்றிய முழு விபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வதென்பது சாத்தியமற்ற தாகும். ஏனெனில், இவ்வுலகப் பொருட்களுடனான ஒப்புநோக்கின் அடிப்படையிலான, மட்டுப்படுத்தப்பட்ட அறிவே நம்மிடம் உள்ளது.

8. மறுமை நாளில் ஷபாஅத்

மறுமை நாளில் நபிமார்களும் பரிசுத்த இமாம்களும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் அனுமதி யுடன் சில பாவிகளுக்குப் பரிந்துரை செய்வார்கள் என்றும் அவ்வாறு பரிந்துரை செய்யப் படுவோர், அல்லாஹ்வின் பாவமன்னிப்பைப் பெற்று, அவனது அருளுக்குத் தகுதியுள்ளவர்களாக மாறி விடுவர் என்றும் நாம் நம்புகின்றோம்.

அல்லாஹ்வுடனும் அவனது நேசர்களுடனுமான தம் தொடர்பைத் துண்டிக்காதவர்களுக்கே ஷபாஅத் பெறும் பாக்கியம் உண்டு. இதனடிப்படையில், ஷபாஅத் செய்யப்படுவதற்கான தகுதி பெறுவதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அவை, மனிதர் களது செயற்பாடுகளுடனும் எண்ணங்களுடனும் தொடர்புடை யவையாகும்.

'அவன் பொருந்திக் கொண்டவரைத் தவிர, (வேறெவருக்கும்) இவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள்."   (21:28)

ஷபாஅத் என்பது, ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல நல்வழியில் மனிதர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு வழிமுறையாகும். அவர்கள் பாவத்தில் மூழ்குவதையும், இறைநேசர்களுடனான தொடர்புகளை துண்டிப்பதையும் தடுக்கின்ற ஓர் உத்தியாகும். அவர்களது உள்ளங்களில் எழுகின்ற தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, நல்வழியின் பால் அவர்களைத் திசை திருப்ப முயற்சிக் கின்ற, தவறுகளில் விழுகின்ற போது தொடர்ந்தும் அதில் மூழ்காமல் மீண்டு வர அவரைத் தூண்டுகின்ற சாதனமாகும்.

மறுமை நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள் ''ஷபாஅதுல் குப்ரா" எனும் மாபெரும் பரிந்துரை செய்வார்கள். அவர்களை யடுத்து ஏனைய நபிமார்களும் பரிசுத்த இமாம்களும் ஏன் உலமாக்கள், ஷுஹதாக்கள், முஃமின்கள், ஆரிபீன்கள் மற்றும் அல்குர்ஆன், சாலிஹான நல்லமல்கள் என்பனவும் மனிதர்களுக்கு பரிந்துரை செய்ய முடியும்.

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் குறிப்பிடுகின்றார்கள்: 'முந்தியோர் பிந்தியோர்களில் எவரும், மறுமை நாளில் நபிகளாரின் ஷபாஅத்து தேவையற்றவர்களாக இல்லை." (பிஹாருல் அன்வார் - பாக.8, பக்.42(

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி கூறினார்கள்:

'மறுமையில், ஷபாஅத்து செய்யக் கூடியவை ஐந்து. அல்குர்ஆன், உறவினர்களை சேர்ந்து நடத்தல், அமானத், உங்களது நபி மற்றும் உங்களது நபியின் குடும்பத்தினர்." (கன்சுல் உம்மால் பாக 14 பக் 390 ஹதீஸ் 39041)

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 'மறுமை நாளில் ஆலிமும் (அறிஞர்) ஆபிதும் (வணக்கவாளி) அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார்கள். ஆபிதைப் பார்த்து நீர் சுவர்க்கம் செல்லலாம் என அல்லாஹ் அனுமதி வழங்குவான். ஆலிமிடம், 'நீர் சற்று நில்லும், மக்களை நீர் சிறப்பாக பயிற்றுவித் தமையின் பொருட்டால் அவர்களுக்கு பரிந்துரை செய்யும்" என்று அல்லாஹ் கூறுவான்." 

 (பிஹாருல் அன்வார் -பாக 8 - பக் 56 - ஹதீஸ் 66)

இந்த ஹதீஸ் ஷபாஅத் செய்வதன் தத்துவத்தை மிக அழகாகவும் தெளிவாகவும் உணர்த்துகின்றது.

9. ஆலமுல் பர்ஸக்

இவ்வுலகிற்கும் மறுவுலகிற்கும் இடையிலே பிறிதோர் உலகம் இருக்கின்றது. ஆலமுல் பர்ஸஹ் என அழைக்கப்படும் இவ்வுலகில் தான், மரணித்த அனைவரது உயிர்களும் மறுமை வரை வைக்கப் பட்டிருக்கும் என்று நாங்களும் நம்புகின்றோம்.

'இன்னும் அவர்கள் மரணித்ததிலிருந்து எழுப்பப்படும் வரை அவர்களுக்குப் பின்னால் பர்ஸக் இருக்கின்றது."  (23:100)

ஆலமுல் பர்ஸஹைப் பற்றிய அறிவும் மிகவும் மட்டுப் படுத்தப் பட்டதாகும். எனினும், அங்கு '{ஹதாக்கள் போன்ற நல்லடியார்களது ஆத்மாக்கள் உயர்ந்த அந்தஸ்தில் வைக்கப்பட்டு, பல நிஃமத்துகளை அனுபவித்த வண்ணம் இருப்பார்கள் என்று மட்டும் அறிந்து வைத்துள்ளோம்.

'ஒரு போதும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்து விட்டவர்களென நினைக் காதீர்கள். அவர்கள் உயிருள்ளவர்கள் தான். இன்னும் அவர்கள் தமது இறைவ னிடத்தில் உணவளிக்கப் படுகின்றனர்." (03: 169)

அநியாயக்காரர்கள், அக்கிரமக்காரர்களது ஆத்மாக்கள் அங்கு வேதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. அல்குர்ஆன் பிர்அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறது.

'நரக நெருப்பின் மீது காலையிலும் மாலையிலும் அவர்கள் எடுத்துக் காட்டப் படுவார்கள். மேலும், மறுமை நாள் நிலைபெற்று விடும் நாளில் பிர்அவ்னைச் சார்ந் தோரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்."  (40: 46)

ஆனால், அதிக பாவமுமின்றி அதிக நன்மையுமின்றி நடுநிலையில் உள்ளவர்கள், இன்பம் சுகிப்பதோ, வேதனைக்கு உள்ளாக்கப்படுவதோ இன்றி தூக்கத்திற்கு ஒப்பான ஒரு நிலையில் மறுமை வரை வைக்கப்பட்டிருப்பார்கள், மறுமை நாள் ஏற்படும் போது கண்விழிப்பார்கள் எனக் கூறப்படுகின்றது.

'மேலும், மறுமை நாள் நிலை பெறும் போது, குற்றவாளிகள் 'இங்கு கொஞ்ச நேரமே தவிர நாம் தங்கியிருக்கவில்லை|யென சத்தியம் செய்வார்கள். அறிவும், ஈமானும் கொடுக்கப் பட்டிருந்தவர்கள், 'அல்லாஹ்வின் ஏட்டில் உள்ளவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரை திட்டமாக தங்கியிருந்தீர்கள். இது தான் எழுப்பப்படும் நாள். எனினும், நிச்சயமாக நீங்கள் இதனை அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்| என்று கூறுவார்கள்.' (30: 55-56)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள் இது பற்றி இவ்வாறு கூறினார்கள்:

'கப்று, சுவனத்துச் சோலைகளில் ஒரு சோலை யாகும். அல்லது நரகத்துப் படுகுழிகளில் ஒரு படுகுழியாகும்." (திர்மிதி - பாக.4 -கிதாப் ஸிபத்துல் கியாமா பிரிவு.26 - ஹதீஸ் 2460)

10. ஆன்மீக - பௌதீக ரீதியான கூலி

இம்மையில் செய்த செயல்களுக்காக மறுமையில் வழங்கப்படும் கூலிகள் ஆன்மீக மற்றும் பௌதீக பரிமாணங்கள் கொண்டவை. ஏனெனில், மஆத் என்பது ஆத்மா, சரீரம் ஆகிய இரு அம்சங்களுடனும் தொடர்புபட்ட தாகும். அதாவது, நல்லடியார் களுக்கு அவர்களது இறையச்சத்துக்கான பரிசுகளாக நீரோடைகள் நிறைந்த சுவர்க்கத்துப் பூஞ்சோலைகள், நிரந்தரமாகக் கிடைக்கும் கனி வர்க்கங்கள், மர நிழல்கள், பரிசுத்த மங்கையர் முதலான பல்வேறு இன்ப சுகங்கள் கூறப்படுகின்றன. இவையனைத்தும் உடலுக்கும்  புலனுக்கும் இன்பம் தரக்கூடிய பௌதீக ரீதியான கூலியாகும். நரகத்தில் வழங்கப்படும் பல்வேறு உடல் ரீதியான தண்டனைகளும் இவ்வகையைச் சேர்ந்தவையே.

இவை தவிர, நல்லடியார்களுக்கு மறுமையில் அல்லாஹ்வை அறிதல், பின் அவனது சந்நிதானத்தில் அவனை நெருங்கியிருத்தல் முதலான பல்வேறு சுகங்களும் கிடைக்கின்றன. இவையனைத்தும் ஆத்மீக ரீதியான பேரின்பங்களாகும். சுவர்க்கத் தில் வழங்கப்படுகின்ற பௌதீக பயன்பாடுகள் தொடர்பாக கருத்துரைக்கும் அல்குர்ஆன், ஆன்மீக பயன்பாடுகள் தொடர்பாகவும் குறிப்பிட்டுச் சொல்கின்றது:

'இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தம் தான் மிகப் பெரியது. அது மகத்தான வெற்றியாகும்."  (09: 72)

ஓர் அடியானுக்கு அல்லாஹ்வின் திருப் பொருத்தம் கிடைத்து, அவனது அருட்பார்வையின் கீழ் இருப்பதை விட சிறந்த இன்பம் வேறேது இருக்க முடியும்? இமாம் அலீ இப்னு ஹுஸைன் அலைஹிஸ் ஸலாம் றிவாயத் செய்யும் ஒரு ஹதீஸில் குறிப்பிடப்படுவதாவது:

அல்லாஹ் அவர்களுக்குக் கூறுவான், 'உங்களை நான் பொருந்திக் கொண்டதும், உங்கள் மீது நான் கொண்டிருக் கும் அன்பும் உங்களுக்கு வழங்கப்பட்ட, நீங்கள் அனுபவித்துக் கொண்டிரு க்கும் எல்லா சுகண்டிகளை விடவும் சிறந்ததும் மேலானதாகும்."    )தப்ஸீர் அய்யாஸ் -சூரா தௌபா, வசனம் 78)

அல்லாஹ்வின் அன்பும், திருப்தியுமே ஓர் அடியானுக்குக் கிடைக்கின்ற மிகப் பெரிய வெற்றியும் இன்பமும் ஆகும். அல்குர்ஆன் கூறுவதாவது:

      'அமைதியடைந்த ஆத்மாவே! நீ உன் இரட்சகன் பக்கம் அவனைத் திருப்திப்படுத்திய நிலையிலும், அவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்ட நிலையிலும் மீள்வாயாக. எனவே, நீ எனது அடியார்களில் பிரவேசிப்பாயாக. இன்னும் எனது சுவனத்திலும் நுழைந்து விடுவாயாக."  (89:27-30)