இமாமத்

1. எப்போதும் ஒரு வழிகாட்டி வேண்டும்

மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக காலத்திற்குக் காலம் நபிமார்களை அனுப்புவது இறைஞானத்தின் பிரகாரம் அவசியமாக இருந்தது போலவே, அவர்களுக்குப் பிறகு இறை ஞானத்தைப் போதித்து மக்களை அல்லாஹ்வின் பாதையிலும் அவனது தூதரின் பாதையிலும் அழைப்பதற்காகவும் எவ்வித மாற்றங்களுக்கும் அனுமதிக்காது மார்க்கத்தைப் பாதுகாப்பதற் காகவும் காலத்திற்குக் காலம் ஏற்படுகின்ற புதிய தேவைகளுக்கு தீர்வுகளை வழங்குவ தற்காகவும் உலகில் எப்போதும் ஒரு வழிகாட்டி -இமாம் இருக்க வேண்டும் என்பதையும் இறை ஞானம் வலியுறுத்துகிறது.

அவ்வாறில்லையெனில், மனித வாழ்க்கையின் நோக்கமான பரிபூரணத்துவத்தை அடைந்து கொள்வதில் பின்னடைவுக்குட்பட வேண்டிய நிலை மனிதர்களுக்கு ஏற்படும். இதனால் தான், திருநபி -ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி- அவர்களுக்குப் பிறகுள்ள ஒவ்வொரு காலத்திலும் ஓர் இமாம் இருக்க வேண்டியது அவசியம் என நாம் நம்புகின்றோம்.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள். இன்னும் உண்மையா ளர்களுடன் இருந்து கொள்ளுங்கள்;.'  (09:119)

இவ்வசனம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மாத்திரம் உரியதல்ல. உடனிருத்தல் என்பது, உண்மையாளர்க ளுடன் மாத்திரம் தான் என்ற நிபந்தனையுடன் வரையறுக்கப் பட்டுள்ளது. இது, எல்லாக் காலத்திலும் ஒரு பரிசுத்த இமாம் இருக்க வேண்டும் என்பதையும், அனைவரும் அவரையே பின்பற்ற வேண்டும் என்பதையும் எமக்கு உணர்த்துகின்றது. ஷீயா-சுன்னா குர்ஆன் விரிவுரையாளர்கள் பலரும்; இதே கருத்தையே முன்வைக்கின்றனர்.

இமாம் பஹ்ருர் ராஸீ, தனது பரவலான ஆய்வின் பின் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

'ஒவ்வொரு மனிதனும் பாவம் செய்யக் கூடியவன். இதனால், பாவங்களை விட்டும் தூய்மையாக்கப்பட்டவரையே பின்பற்றுவது எம் அனைவர் மீதும் கடமையாகும். அல்லாஹ் வினால், அவர்கள் குர்ஆனில் 'சாதிகீன்கள்' என்று குறிப்பிடப் படுகின்றனர். எனவே, என்றும் பரிசுத்தமுடைய வர்களுடன் இருப்பதே அனைவர் மீதும் கடமையாகும். ஏனெனில், பாவங்களை மேற்கொள்கின்ற சாத்தியமுள்ள நாம் பாவம் செய்யாதவரையே வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும். மேலும் இவ்வசனம், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமல்லாமல், சகல காலங் களுக்கும் உரியதாகும். ஆகவே தான், இவ்வசனம் ஒவ்வொரு காலத்திலும் பாவங்களை விட்டும் பரிசுத்தமடைந்த இமாம் ஒருவர் இருப்பார் என்பதைக் குறிக்கின்றது.'  (தப்ஸீர் கபீர், பாக.16, பக்.221)

2. இமாமத்தின் உண்மை நிலை

இமாமத் எனப்படுவது, வெறுமனே ஆட்சி செய்வதற்காக எடுத்துக் கொள்ளப்படும் ஒரு பதவியல்ல. மாறாக இது ஆன்மீகம் சம்பந்தமான ஓர் உயர் பதவியாகும். ஓர் இமாம், இஸ்லாமிய ஆட்சிக்குத் தலைவராக இருப்பதுடன், இம்மை-மறுமை விடயங்களில் மக்களுக்கு நேர்வழி காட்டுவதை தன் தோளில் சுமந்துள்ள பொறுப்பாளராகவும் விளங்குகின்றார். மேலும், பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பாதுகாத்து, நபியவர்கள் கொண்டிருந்த நோக்கங்களையும் அவர் நிலை நிறுத்துவார்.

இமாமத் எனும் இந்த உயரிய அந்தஸ்து, நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, அவர்களது நபித்துவத்தின் பின் பல சோதனைகளில் அவர்கள் சித்தியடைந்ததன் பிறகு வழங்கப்பட்ட கண்ணியமாகும். இப்பதவி வழங்கப்பட்ட சமயத்தில், அதனை தமது பரம்பரையினருக்கும் தருமாறு இப்ராஹீம் நபியவர்கள் வேண்டிய போது, அநியாயக்காரர்களை இது ஒரு போதும் சென்றடையாதென அவர்களுக்குக் கூறப்பட்டது.

'இன்னும், இப்ராஹீமை, அவரது இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில், அவற்றை அவர் நிறைவு செய்தார் என்பதை நினைவு கூர்வீராக. நிச்சயமாக, மனிதர்களுக்கு நான் உம்மை இமாமாக ஆக்குகின்றேன் என அல்லாஹ் கூறினான். அதற்கு அவர், என்னுடைய சந்ததியிலிருந்தும் (இமாம்களை ஆக்குவாயா?) எனக் கேட்டார். அதற்கு இறைவன், அநியாயக் காரர்களை எனது வாக்குறுதி சேராது எனக் கூறினான்.'  (02: 124)

இத்தகைய பதவியும் அந்தஸ்தும் வெளிப்படையான ஆட்சியைக் குறிப்பதல்ல. அது அகநிலை சார்ந்த ஒரு சிறப்பம்சமாக அமைந்திருக் கின்றது. மேலும், மேற்கூறியது போன்று இமாமத் விளங்கப்படுத்தப் படாவிட்டால், இவ்வசனம் தெளிவான தொரு விளக்கத்தையும் கொண்டிராது.

உலுல் அஸ்ம்களான சகல நபிமார்களும் இவ்(இமாமத்) அந்தஸ்து உடையவர்களாக இருந்தனர் என்று நாம் நம்புகின் றோம்.. அன்னோர் தமது தூதைப் பிரசாரம் செய்து, செயல் ரீதியிலே மக்களுக்கு அதை எடுத்துக் காட்டினர். அவர்கள் ஆன்மீக-இலௌகீக ரீதியிலும், உட்புற-வெளிப்புற விடயங்களிலும் மக்களுக்கு வழிகாட்டிகளாகத்  திகழ்ந்தனர். குறிப்பாக, பெருமா னார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், தமது நபித்துவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இவ் அந்தஸ்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களது பணி இறைகட்ட ளைகளைப் பரப்புவதில் மாத்திரம் சுருங்கி விடுவதில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னர், இந்த இமாமத் பணி, அவர்களது சந்ததியினரில் தோன்றிய பன்னிரண்டு பரிசுத்த மனிதர்களுக்கு வழங்கப்பட்டது என நாம் நம்புகின்றோம்.

இமாமத் எனும் இவ்வுயர் பதவியை அடைவதற்கு முக்கிய நிபந்தனைகள் பல உள்ளன. அவர், முழுமையான இறையச்சம் கொண்டவராகவும் எவ்வித பாவமும் செய்யாத வராகவும் அறிவிலும் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பற்றிய தெளிவிலும் பூரணத்துவமுடையவராகவும் இருப்பதுடன், மனிதர்க ளையும் அவர்களது கால - இட தேவை நிலைகளை யும் உணர்ந்திருப்பதும் அவசியமாகும்.

3. இமாம்கள் பாவத்தில் இருந்து பரிசுத்தமானவர்கள்

இமாம்கள், பாவம் செய்வதிலிருந்தும் தவறிழைப்பதில் இருந்தும் பரிசுத்தமானவர்களாக இருப்பது இது பற்றிய எமது நம்பிக்கையின் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், மேலே எடுத்தாளப்பட்ட குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டது ஒரு புறமிருக்க, அவர்கள் பாவமிழைப்போராக இருப்பின், மக்கள் அவர்கள் மீது நம்பிக்கையிழந்து விடுவர். அவர்களிடமிருந்து மார்க்கத்தின் அடிப்படைகள் மற்றும் பிரிவுகள் பற்றிய அறிவைக் கற்றுக் கொள்ள அது தடையாகவும் அமையும். இதனால் தான், இமாம்கள் பரிசுத்தமானவர்களாக இருப்பதோடு, அவர்களது சொல், செயல், அங்கீகாரம் முதலானவை மார்க்கத்தின் ஆதாரங்க ளென வலியுறுத்தப் பட்டுள்ளது.

4. இமாம்கள் மார்க்கத்தின் பாதுகாவலர்கள்

இமாம்கள், ஒருபோதும் புதிய மார்க்கத்தை அறிமுகப் படுத்தவோ, புதிய சட்டதிட்டங்களை உருவாக்கவோ மாட்டார்கள். மாறாக, மக்களிடையே தோன்றுகின்ற பிரச்சினை களுக்கு அல்குர்ஆன் மற்றும் நபியவர்களின் ஸுன்னா என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பும் வழிகாட்டலும் வழங்குவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பாதுகாப்பது, அவர்களது முக்கிய பணிகளில் ஒன்றாகும். அத்துடன், அம் மார்க்கத்தை மக்களுக்கு போதிப்பதும் நேர்வழியின் பால் மக்களுக்கு அழைப்பு விடுப்பதும் அவர்களது கடமையாகும்.

5. பரிபூரண அறிவுள்ளோர்

இமாம்கள், இஸ்லாமிய சட்டதிட்டங்களை தெளிவுபடுத்துவதற்கும், அல்குர்ஆனின் சரியான பொருளை விளங்கப்படுத்துவதற்கும் பரிபூரண அறிவைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய அறிவும், ஞானமும் அல்லாஹ்விடம் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு வழங்கப்பட்டு, நபியவர்களிடமிருந்து இமாம்களுக்கு கொடுக்கப் பட்டதாகும். அறிவு விடயத்தில் இத்தகைய பூரணத்துவத்துடன் இருக்கின்ற போதே, அவர்கள் மனிதர்களின் நம்பகத்தன்மைக்கு உரியவர்களாக ஆகின்றனர். அவர்களது வழிகாட்டலை தமது வாழ்க்கை நெறிப்படுத்தலுக்காக ஏற்றுக் கொள்ளவும் மனிதர்கள் முன்வருவர்.

6. இமாமை நியமிப்பது யார்?

இமாம் யார் எனக் கூறும் நிர்ணய விசயம் இறைவனால் தெளிவாகக் கூறப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னால் வரக்கூடிய ஒவ்வொரு இமாமும் அல்லாஹ்வின் புறமிருந்து, நபி மூலம் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும் என நாம் நம்புகின்றோம். இது நபி இப்ராஹீமுக்கு 'நாம் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்கினோம்' என்று கூறுவதை ஒத்ததாகும்.

அத்தோடு, இறையச்சத்தில் உச்சநிலையை அடைந்தவர் களாகவும், ஒரு விடயத்தில் பிழையோ, தவறோ செய்ய முடியாத அறிவைப் பெற்றவர்களாகவும் இமாம்கள் இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பின்னால் இமாம்களே அறிஞர்கள் என்ற வகையில், சமகால மக்கள் அனைவரிலும் உயர்ந்த அறிவுள்ளவர்களாகத் திகழ்வார்கள். இதனடிப்படையில், பரிசுத்த இமாம்கள் தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்படுவ தென்பது, மனிதர்கள் மூலமாக அல்லாமல், அல்லாஹ்வின் மூலமே இடம்பெறுகின்றது என்பது நமது உறுதியான கோட்பாடாகும்.

7. இமாம்கள் நிர்ணயிக்கப்படல்

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள், தமக்குப் பின்னால் வரக் கூடிய இமாம்களைப் பற்றிய தகவல்களை உலகுக்கு வழங்கியுள்ளார்கள். 'தகலைன்' எனும் பிரபல்யமான ஹதீஸில் இதுபற்றி நபியவர்கள் விளக்கமளித் துள்ளார்கள்.

ஸஹீஹ் முஸ்லிமிலே குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மக்காவுக்கும் மதீனாவுக்கும் இடையிலுள்ள 'கதீர் ஹும்' எனும் இடத்தில், எழுந்து குத்பா பிரசங்கம் நிகழ்த்தி விட்டுச் சொன்னார்கள்:

'நான் உங்களிடமிருந்து விடைபெறும் நாள் நெருங்கி விட்டது. இதனால், உங்களுக்கு மத்தியில் பெறுமதி மிக்க இரண்டு பொக்கிஷங்களை விட்டுச் செல்கின்றேன். அவற்றில் முதலாவது- நேர்வழியும் ஒளியும் கொண்டுள்ள இறைவேதம். மற்றையது- எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்தினர். எனது குடும்பத்தார் விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்வை ஞாபகமூட்டுகின்றேன்.' இதை மூன்று முறை குறிப்பிட்டுச் சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் - பாக 4 - பக் 1873)

இதே பொருள்பட ஸஹீஹ் திர்மிதியிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 'நீங்கள் இவற்றைப் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள்.'   (திர்மிதீ - பாகம் 5 - பக் 662)

இந்த ஹதீஸ் சுனன் தாரமீயிலும் (பாக 2 - பக் 432), கஸாயிஸ் நஸயீயிலும் (பக் 20), முஸ்னத் அஹ்மதிலும் (பாக 5 - பக் 182) மற்றும் அதிகமான இஸ்லாமிய கிரந்தங்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இது முதவாதிரான (மறுப்புக்கிடமின்றி அனைவரிடத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட) ஹதீஸாகும். எந்தவொரு முஸ்லிமும் இதனை நிராகரிக்க முடியாது.

இந்த ஹதீஸை நபியவர்கள், ஓரிடத்தில் மாத்திரம் கூறவில்லை. பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணர முடிகின்றது.

ஆனால், அல்குர்ஆனுக்கு அடுத்ததான இவ் உயர் நிலையை நபிகளாருடைய குடும்பத்தினர் அனைவருமே பெற்றுக் கொள்வதென்பது சாத்தியமற்றதும் நடைபெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் புறம்பானதுமாகும். எனவே, இச்சிறப்பு, நபிகளாருடைய குடும்பத்தில் தோன்றி, பாவங்களை விட்டும் பரிசுத்த மாக்கப்பட்டவர்களாக இருந்த இமாம்களையே சாரக்கூடியதாக இருக்கின்றது.

(சில பலவீனமான ஹதீஸ்களில், அஹ்லுல் பைத் என்பதற்குப் பதிலாக 'சுன்னத்தீ'-எனது வழிமுறை- என்று குறிப்பிடப் பட்டு வந்துள்ளது.)

மேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், சுனன் அபீதாவுத், முஸ்னத் அஹமத் போன்ற பிரபல்யம் வாய்ந்த ஹதீஸ் கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு ஹதீஸ் பின்வருமாறு: 'மறுமை நாள் வரும் வரை அல்லது குறைஷிகளைச் சேர்ந்த பன்னிரண்டு கலீபாக்கள் உங்கள் மீது வரும் வரை இந்த மார்க்கம் நிலைபெற்றிருக்கும்.' (புஹாரி - பாக 3 - பக் 101,  திர்மிதீ - பாக 4 - பக் 50,  அபூதாவுத் - பாக 4 - கிதாபுல் மஹ்தி)

இமாமிய்யாக்களுடைய அகீதாவிலே, பெயர் குறிப்பிடப் பட்டுள்ள பன்னிரண்டு இமாம்கள் பற்றிய கோட்பாட்டைத் தவிர, இந்த ஹதீஸுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறொரு விளக்கத் தைக் கொடுக்க முடியாது.

8. இமாம் அலீயை நபிகளார் நியமித்தார்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களை தமது பிரதிநிதியென இறை கட்டளையின் பிரகாரம் பலதடவைகளில் பிரகடனப் படுத்தியிருக் கின்றார்கள் என நாம் நம்புகின்றோம். அவற்றில் சில:

நபியவர்கள், தமது இறுதி ஹஜ்ஜை முடித்து விட்டு வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், கதீர்ஹும் எனுமிடத்தில் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒரு பிரசங்கம் செய்தார்கள். அப்போது சொன்னார்கள்:

'மனிதர்களே! நான் உங்களை விடவும் உயர்ந்தவ னில்லையா?' என்று வினவிய போது, அவர்கள் அனைவரும் 'ஆம்' என்றனர். பின்பு சொன்னார்கள், 'எனவே, எவருக்கெல்லாம் நான் தலைவராக இருந்தேனோ, அவர்களுக்கு இனி தலைவராக வும் வழிகாட்டியாகவும் அலீ இருப்பார்.'

இந்த ஹதீஸ், பல வழிகளில் நபியவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இதை ஸஹாபாக்களில் 110 பேருக்கு அதிகமானவர்களும், தாபிஈன்களில் 84 பேரும் அறிவித்திருக்கின்றார்கள். சுமார் 360க்கும் அதிகமான பிரபல இஸ்லாமிய நூற்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீயின் மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடே இதுவென்றோ, 'மௌலா' என்பதற்கு நட்பு, நேசம் என்ற கருத்தின் அடிப்படையில் இது சாதாரணமான ஒரு ஹதீஸென்றோ இதில் பொதிந்துள்ள கருத்துகளை அலட்சியமாகப் புறந்தள்ளி விட முடியாது. மாறாக, இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது ஹஸ்ரத் அலீயுடனான தொடர்பின் உண்மை இயல்பைப் பிரதிபலிப்ப தாகவும், இஸ்லாமிய அகீதா வுடன் நெருக்கம் கொண்ட தாகவும் விளங்குகின்றது.

நபித்துவத்தின் ஆரம்பத்தில் 'உங்களது நெருங்கிய குடும்பத்தினருக்கு எச்சரிக்கை செய்வீராக' எனும் திருமறை வசனம் இறங்கிய போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது குடும்பத்தார் அனைவரையும் அழைத்து, இஸ்லாத்தை எடுத்துக் கூறினார்கள். பின்னர், 'இவ்விடயத்தில், உங்களில் எவர் எனக்கு உதவி செய்கின்றாரோ அவர், உங்களுக்கு மத்தியில் எனது சகோதரரும் வாரிசும் எனது பிரதிநிதியுமாவார்' என்று அறிவித்த போது, அங்கு கூடியிருந்தவர் களில் ஹஸ்ரத் அலீயைத் தவிர வேறு எவரும் நபியுடைய இந்த அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை. ஹஸ்ரத் அலீ நபிகளாரைப் பார்த்துக் கூறினார்கள்:

'அல்லாஹ்வின் நபியே! நான் இவ்விடயத்தில் உங்களுக்கு உதவியாளனாக இருப்பேன்;' என்றார்கள். பின், நபியவர்கள் ஹஸ்ரத் அலீயைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்கள்:

'நிச்சயமாக, இவர் உங்கள் மத்தியில் எனது சகோதரரும்    பிரதிநிதியுமாவார்.' (காமில் இப்னு அதீர் - பாக 2 - பக் 63  முஸ்னத் அஹ்மத் பாக 1. பக் 11,  இப்னு அபில் ஹதீத் - ஷரகு நஹ்ஜுல் பலாகா பாக,2.பக்.210, மற்றும் வேறு பலரும் அறிவிக்கின்றனர்)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள் தமது வாழ்வின் இறுதித் தருணத்திலும் கூடியிருந்தவர் களிடம் மீண்டும் இதை உறுதிப்படுத்துவதற்காக விரும்பினார்கள். ஸஹீஹ் புஹாரியில் கூறப்பட்டுள்ளது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூடியிருந்தவர் களைப் பார்த்து:

'உங்களுக்கு ஒரு விடயத்தை எழுதுவதற்காக, என்னிடம் ஏதாவது ஒன்றை (எழுது கோலும் ஓலையும்) கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள்' எனக் கட்டளை பிறப்பித்தார்கள். அங்கிருந்த சிலர் நபியவர்களுடைய கட்டளையைப் புறக்கணித்து,  அவர்களுக்கு எழுதுவ தற்கான பொருளைக் கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர். அது மாத்திரமின்றி, மிகவும் கீழ்த்தரமான வார்த்தை களை உபயோகித்து தடுத்துவிட்டனர் என இந்த ஹதீஸின் தொடரிலே குறிப்பிடப்படுகின்றது,  (புஹாரி - பாக 5 - பக் 11 நபியின் நோய் பற்றிய பிரிவு, இதை விடத் தெளிவாக ஸஹீஹ் முஸ்லிம் - பாக 3, பக் 1259ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

9. ஒவ்வொரு இமாமும் அடுத்தவரை அறிவித்தல்

பன்னிரண்டு இமாம்களில் ஒவ்வொரு இமாமும் அவருக்கு முந்திய இமாமால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களில் முதன்மையானவர் இமாம் அலீ இப்னு அபீ தாலிப் ஆவார். அப் பன்னிருவர் பற்றிய விபரம் வருமாறு:

1. இமாம் அலீ இப்னு அபீ தாலிப் அலைஹிஸ் ஸலாம்.

2. இமாம் ஹஸன் இப்னு அலீ அலைஹிஸ் ஸலாம்.

3. இமாம் ஹுஸைன் இப்னு அலீ அலைஹிஸ் ஸலாம்.

4. இமாம் அலீ இப்னு ஹுஸைன் (ஜெய்னுல் ஆபிதீன்) அலைஹிஸ் ஸலாம்.

5. இமாம் முஹம்மத் இப்னு அலீ அல்பாக்கிர் அலைஹிஸ் ஸலாம்.

6. இமாம் ஜஉபர் இப்னு முஹம்மத் அஸ்ஸாதிக் அலைஹிஸ் ஸலாம்.

7. இமாம் மூஸா இப்னு ஜஉபர் அலைஹிஸ் ஸலாம்.

8. இமாம் அலீ இப்னு மூஸா அர்ரிழா அலைஹிஸ் ஸலாம்.

9. இமாம் முஹம்மத் ஜவாத் இப்னு அலீ அத்தகீ அலைஹிஸ் ஸலாம்.

10. இமாம் அலீ இப்னு முஹம்மத் அன்னக்கீ அலைஹிஸ் ஸலாம்.

11. இமாம் ஹஸன் இப்னு அலீ அல்அஸ்கரீ அலைஹிஸ் ஸலாம்.

12. கடைசியானவரான இமாம் முஹம்மத் இப்னு ஹஸன் அல்மஹ்தி அலைஹிஸ் ஸலாம். ஹஸ்ரத் இமாம் மஹ்தீ அலைஹிஸ் ஸலாம் இப்பொழுதும் உயிர் வாழ்கின்றார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.

 இறுதிக் காலத்தில் இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் தோன்றி உலகை நீதியால் நிரப்புவார்கள் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நம்புகின்றனர். இமாம் மஹ்தியின் தோற்றம் பற்றிய ஹதீஸ் முதவாத்திர் ஆனதென நிறுவும் தனியான கிரந்தங்களையும் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் யாத்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் 'ராபிததுல் ஆலமில் இஸ்லாமி' பத்திரிகையில், இமாம் மஹ்தி பற்றி கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு வழங்கப்பட்ட விளக்கத்தில், அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், அதற்கான ஆதாரங்களாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் நவின்ற, பிரபல்யமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்ட பல ஹதீஸ்களும் முன்வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகவல் 24 ஷவ்வால் 1396ல் மஜ்மஉல் பிக்ஹில் இஸ்லாமி நிறுவனப் பணிப்பாளர் முஹம்மத் அல் முன்தஸிர் அல் கத்தானீயின் அங்கீகாரத்துடன் வெளியானது.

எனினும், அவர்களில் அதிகமானோர், இமாம் மஹ்தி இன்னும் பிறக்கவில்லையென்றே நம்புகின்றனர். எனினும் இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் ஏற்கனவே பிறந்துள்ளார் என்பதும் பன்னிரண்டாவது இமாமான அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உலகில் நீதியை நிலை நாட்டுமாறு அல்லாஹ்வின் கட்டளை கிடைத்ததும் அவர்கள் வெளியாகு வார்கள் என்பதும் நமது நம்பிக்கையாகும்.

10. ஹஸ்ரத் அலீ - அதி சிறந்த ஸஹாபி

ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் ஸஹாபாக்கள் அனைவரிலும் மிகச் சிறப்புக்குரியவர்கள் ஆவார். மற்றும் அன்னார் நபிகளாருக்குப் பின்னர் முஸ்லிம் உலகில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது நமது நம்பிக்கையாகும். இதுவே அவர்கள் பற்றிய யதார்த்தமாகும்.

இதைவிட மிகைத்துச் சென்று அன்னாரை தெய்வீகத் தன்மை கொண்டவர் எனக் கருதுவதோ அல்லது நபிகளாருடைய தரத்தில் வைத்துப் புகழ்வதோ ஹராமான, ஈமானை இழக்கச் செய்யும் விடயமாகும். அவ்வாறு செய்வோர் வழிகெட்டவர்கள் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. துரதிர்ஷ்டவசமாக, இத்தகை யோரும் ஷீயாக்கள் என்றே உலகில் அறியப்படுவ தனால் உண்மையான ஷீயாக்களின் சிறப்புகளும் யதார்த்தங்களும் ஏனையோரால் கவனிக்கப்படாமல் போய்விடக் கூடிய நிலையேற்படுகின்றது. எனினும் இமாமிய்யா ஷீயாக்கள் இத்தகைய தீவிரக் கருத்துக் கொண்டோரை இஸ்லாத்தைவிட்டும் தூரமானோர் எனக் கருதுகின்றனர்.

11. ஸஹாபாக்கள்

நபித்தோழர்களுக்கு மத்தியில் நல்லவர்கள், சிறப்புக்குரியவர்கள், தியாகிகள் பலர் காணப்பட்டனர். குர்ஆனும், ஹதீஸும் அவர்களை அழகாக சித்தரித்துக் கூறுகின்றன. அதற்காக, நபித் தோழர்கள் அனைவருமே பாவதோசங்களிலிருந்து பரிசுத்தமானவர்களென்றும் அவர்களது செயல் அனைத்துமே சரியானவையாக ஏற்றுக் கொள்ளப் படத்தக்கவையென்றும் கூறிவிட முடியாது. உதாரணமாக அல்குர்ஆனின் சில வசனங்கள் (சூரா பராஅத், நூர், முனாபிகூன் போன்றவை) நயவஞ்சகர்களைப் பற்றிக் கூறுகின்றன. இந்நயவஞ்சகர்களும் நபித்தோழர்களுக்கு மத்தியில் தான் காணப்பட்டனர். அதனால், அவர்களும் நபித் தோழர்களாகவே கருதப்படக்கூடிய நிலை காணப்பட்டது.

அவர்களில் சிலர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பிறகு அமைதியாக இருந்த முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணத் துணை போன வரலாறும் உண்டு. தமது காலத்து கலீபாவுக்கு செய்த பைஅத்தை மீறி, பல்லாயிரக் கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படக் காரணமாகவும் அமைந்தனர் சிலர். எனவே, இத்தகையோரது வாழ்க்கையையும் செயற்பாடு களையும் புனிதமானவை எனக் கருத முடியுமா?

வேறொரு வகையில் சொல்வதானால், இரு தரப்பினர் யுத்தத்தில் ஈடுபடுகின்ற போது, (உதாரணமாக ஜமல், சிப்பீன் போன்றவை) அவ்விரு தரப்பையும் சரியானவர்கள் என்றோ அவ்விருவரது செயலையும் சரியானது என்றோ எவ்வாறு ஒப்புக்கொள்ள முடியும்? இது முரண்பாடான ஓர் அம்சமாகும். எனினும், இதனை நியாயப்படுத்துவதற்காக இஜ்திஹாதை அவர்கள் ஆதாரமாகக் கொள்ள முனைகின்றனர். இரு கூட்டத் திலும் ஒரு கூட்டத்தினர் உண்மையின் பக்கம் இருக்க, மற்றவர்கள் தமது இஜ்திஹாதில் தவறிழைத்தார்கள். எனவே, அவர்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பும், நன்மையும் இருக்கின்றன என அவர்கள் வாதிடுகின்றனர். நம்மைப் பொறுத்த வரையில் இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு வாதம் அல்ல. இது மிகவும் சங்கடமான ஒரு நிலையை தோற்றுவிக்கின்றது.

இஜ்திஹாத் என்பதை சாட்டாகக் கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பிரதிநிதியுடன் செய்த பைஅத்தை முறித்து, யுத்தத்தைத் தொடங்கி, முஸ்லிம்களின் உயிர்களைப் பறிப்பதென்பது எவ்வகையிலும் நியாயமான ஒரு விடயமாகக் கொள்ளப்பட முடியாது. இஜ்திஹாத் தவறாகப் பாவிக்கப் பட்டால் எக்காரியத்தைத் தான் இஜ்தஹாதின் பேரால் நியாயப்படுத்த முடியாது?

நமது நம்பிக்கையின் படி ஒவ்வொரு மனிதனும் -ஸஹாபாக்கள் உட்பட- அவரவர் சம்பாதித்துக் கொண்டவை களுடனேயே இருப்பார்கள். இதன் பிரகாரம், ஒவ்வொருவரும் அவரவரது தக்வாவின் அடிப்படையிலே தர நிர்ணயம் செய்யப் படுகின்றனர். 'உங்களில் சங்கை மிக்கவர் தக்வாவில் உயர்ந்தவர்' எனும் நபி வாக்குக்கேற்ப 'தக்வா' ஒரு மனிதனை அளக்கும் அளவுகோலாகும்.

நபிகளாருடைய காலத்திலும் பின்னரும் இறையச்சம் கொண்டு, அல்லாஹ்வுக்கும் நபியவர்களுக்கும் விசுவாசமாக நடந்தவர்களைப் போற்றி வாழ்த்தும் முஸ்லிம்கள், நபிகளாருடைய காலத்திலும் பின்னரும் வெளிப்புறத்திலிருந்து அவர்களை எதிர்ப்பவர்களாகவும் உள்ளிருந்து அவர்களை வேதனைப்படுத்து வோராகவும் இருந்தவ ர்களை விரும்பாமலிருப்பது நியாயமானதே. எனவே, அவரவரது செயற்பாடுகளே, அவரவரது உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு போதிய சான்றுகளாக அமைகின்றன என்பதை எல்லோரும் தெளிவாக விளங்கிக் கொள்கிறோம். 

'(நபியே!) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்ட சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டார்களே அத்தகையோரை நேசிப்பவர்களாக நீர் காணமாட்டீர். அவர்கள் தங்களது பெற்றோராயினும் அல்லது தங்களது பிள்ளைக ளாயினும் அல்லது தங்களது சகோதரர்களாயினும் அல்லது தங்களது குடும்பத்தவர்க ளாயினும் சரியே. அவர்களது இதயங்களில் அல்லாஹ் ஈமானை எழுதிவிட்டான்.' (58:22)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்திலோ அல்லது பின்னரோ அவர்களை வேதனைக்குள்ளாக் கியவர்கள், முஸ்லிம்க ளால் புகழப்படுவதற்கு எவ்வகையிலும் அருகதையற்ற வர்கள் என்பது நமது தெளிவான நம்பிக்கையாகும்.

எனினும், நபித்தோழர்களில் பெரும்பாலானவர்கள், இஸ்லாத்திற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு கள் தியாகங்கள் மூலமாக அல்லாஹ்வினாலேயே புகழப்படும் நிலையையும் பெற்றிருந்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு நபிகளார் மீது பரிபூரணமான விசுவாசங் கொண்டு வாழ்ந்த தூய ஸஹாபாக்களும் அவர்களுக்குப் பின் அந்நேர்வழி யைத் தெரிவு செய்து இறையச்சத்தோடு வாழ்ந்தவர்களும் அவ்வழியில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் எப்போதும் புகழுக்கும் மரியாதைக்கும் உரியவர்களே என்பதில் ஐயமில்லை.

'முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள், முதலாவதாக முந்திக் கொண்டவர்கள், மற்றும் நற்கருமத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகியோரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான், அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்.' (09:100)

இது தான் ஸஹாபாக்கள் தொடர்பான எமது நம்பிக்கை பற்றிய சுருக்கமான குறிப்பாகும்.

11. இமாம்களின் அறிவு நபியிடமிருந்து வந்ததே

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், அல்குர்ஆன் மற்றும் அஹ்லுல்பைத் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் பிரகாரம், அவ்விரண்டையும் நேர்வழிக்கான வழிகாட்டிகளாக நாம் கொள்கின்றோம்.

அஹ்லுல்பைத் இமாம்கள், பாவங்களை விட்டும் பரிசுத்த மானவர்களாவர் என நாம் நம்புவதால் அவர்களது சொல், செயல், அங்கீகாரம் என்பவற்றையும் குர்ஆன், ஸுன்னா ஆகியவற்றுக்கு அடுத்ததாக மார்க்கச் சட்டங்களுக்கு ஆதாரங்களாகக் கொள்கின்றோம்.

'நாங்கள் உங்களுக்குச் சொல்வதெல்லாம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடமிருந்து எங்கள் தந்தையரை வந்தடைந்து, அவர்களிடமிருந்து எமக்குக் கிடைத்தவையேயன்றி வேறில்லை' என்று மேற்படி இமாம்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இமாம்கள் குறிப்பிடும் அனைத்துமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கருத்து வெளிப்பாடுகளாக அமைகின்றன. மேலும், நம்பகத் தன்மையும் இறையச்சமும் கொண்டு, மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களிடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படத் தக்கதாகும். இமாம்களின் ஹதீஸ்களை இவ்வகையிலும் நோக்கலாம்.

இமாம் முஹம்மத் இப்னு அலீ அல்பாக்கிர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ஜாபிர் (ரழி) அவர்களுக்குச் சொன்னார்கள்:

'ஜாபிரே! நாம் உங்களுக்கு எமது சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டும் மன இச்சையைக் கொண்டும் எதையும் கூறுவோமாயின், நாங்கள் அழிந்து விடுவோம். ஆனால், நாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து சேமித்து வைத்த தகவல்களையே கூறுகின்றோம்.'      (ஜாமிஉ அஹாதீஸ் அஷ்ஷீயா, பாக.1,பக்.18)

ஒரு மனிதர் இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடம் கேள்வி ஒன்றைக் கேட்க, இமாம் அதற்குப் பொறுத்தமான பதிலளித்தார்கள். அம்மனிதர், குறித்த விடயத்தில்  இமாமின் கருத்தை மாற்றியமைப் பதற்காக அவர்களுடன் தர்க்கத்தில்; ஈடுபட முனைந்த போது, இமாம், அவரை நோக்கி, 'இதை விட்டு விடுங்கள். நான் உங்களுக்குக் கூறிய அனைத்து பதில்களும் நபியிடமிருந்து வந்தவையே. இதில் எவ்வித கலந்துரையாடலுக்கும் விவாதத்துக்கும் இடமில்லை' என்று கூறினார்கள்.  (உசூலுல் காபீ, பாக.1, பக்.58)

நமது ஹதீஸ் கிரந்தங்களில் அல் காஃபீ, தஹ்தீப், இஸ்திப்ஸார், மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ் போன்றன முக்கிய மானவை. அதன் அர்த்தம், இவற்றிலுள்ள அனைத்து ஹதீஸ்களும் ஸஹீஹானவை, நிராகரிக்க முடியாதவை என்பதல்ல. ஒவ்வொரு ஹதீஸையும் அறிவித்தவரது வாழ்க்கைக் குறிப்புகள் தெளிவாக சேகரிக்கப்பட்டுள்ள றிஜால் பற்றிய நூல்களும் நம்மிடம் உள்ளன. அறிவிப்பாளர் உரிய நிபந்தனைகளுக்கு உட்படக்கூடிய ஒழுக்க சீலராகவும், இறையச்சமுள்ளவராகவும் இருந்தால், அவர் அறிவித்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இல்லையெனில் அது நிராகரிக்கப்படுகின்றது. அது எந்த கிரந்தத்தில் பதிவுசெய்யப் பட்டிருப்பினும் சரியே.

சில ஹதீஸ்கள், ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான சகல நிபந்தனைகளையும் கொண்டிருந்தும், சட்ட வல்லுனர்களால் அன்று முதல் இன்று வரை வேறு பல காரணங்களுக்காக அது பயன்படுத்தப்படாது விடப்பட்டி ருந்தால், அது 'முஃரழ் அன்ஹா' என அழைக்கப் படுகின்றது. அதுவும் செல்லுபடியற்றதாகும்.

எனவே, நமது நம்பிக்கைகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர், மேற்குறிப்பிட்ட ஹதீஸ் கிரந்தங்களில் உள்ள ஹதீஸ்களை, அவை பற்றிய ஆய்வுகளைக் கவனத்திற் கொள்ளாது பயன்படுத்த முனைவார்களாயின் அவர்களால் பூரணமான அல்லது உண்மையான விளக்கத்தைப் பெறுவது சாத்திய மற்றதாகி விடும். எந்தவொரு ஹதீஸைப் பொறுத்தவரையிலும் அதன் அறிவிப்பாளர் மற்றும் ஏனைய காரணிகளைப்; பொறுத்தே அது சரியானதா? பிழையானதா என்பது தீர்மானிக்கப் படுகின்றது.

வேறொரு விதத்தில் சொல்வதானால், இன்று பிரபல்யம் அடைந்திருக்கும் மத்ஹபுகளிடம் ஸிஹாஹ் (சரியானவை) எனும் பெயரில் ஹதீஸ் கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றிலுள்ள ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவையென அவற்றின் ஆசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். வேறு சிலரும் அவை சரியானவையெனக் கருதியுள்ளனர்.

ஆனால், நமது ஹதீஸ் கிரந்தங்களைத் தொகுத்தவர்கள் நம்பத்தகுந்த நல்லடியார்களாக இருந்த போதிலும், அவர்கள் தொகுத்த ஹதீஸ்களின் உண்மை நிலையை அறிவதற்காக, அவற்றை அறிவித்தவர்களின் வரலாற்றை ஆராய்ந்த பின்னரே அவ சரியானவையா, அல்லது பிழையானவையா என்ற முடிவுக்கு வர முடிகின்றது.

நம்முடைய நம்பிக்கைகள் பற்றி ஆய்வு செய்ய முனையும் பலர் இது பற்றி அலட்சியம்  செய்வதால் பிழையான தகவல்களை முடிவுகளாகப் பெற வழிபிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

எனவே, அல்குர்ஆனுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் ஹதீஸ்களுக்கும் அடுத்தபடியாக பன்னிரண்டு இமாம்களின் ஹதீஸ்களும் -நல்லவர்கள், நம்பத்தகுந்தவர்களினால் அறிவிக்கப் பட்டிருப்பின்- மூலாதாரமாகக் கொள்ளப் படுகின்றன.